Thursday, June 10, 2010

பாவேந்தரும் நானும்

பாவேந்தரும் நானும்

சிறுவயதில் ஏப்ர‌ல் மாதம் வந்தாலே எனக்கு என் பிறந்த நாள் தான் ஞாபகத்திற்க்கு வரும். இப்பொழுது ஏப்ரல் மாதம் வந்தால் “Increment” தான் நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் என்னோடு இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யார் என்று ஆராய தோன்றும். ஹிட்லர், சதாம் உசைன் போன்ற “பிரபலங்கள்” ப‌லர் இந்த மாதத்தில் பிறந்தவர்கள். சச்சினோடு பிறந்த தேதியை பகிர்ந்து கொண்டதில் என‌க்கு ஒரு கர்வம் உண்டு [வ‌ருட‌ம் வேறு ;) ] . அந்த வரிசையில் வருபவர் பாரதிதாசன். அவருடைய பிறந்த நாள் ஏப்ரல் 29.

பள்ளி, கல்லூரி காலத்தில், என் புத்தகத்தில் முதல் பக்கத்தில் என் பெயருக்கு அடுத்து எனக்கு பிடித்த வாசகம் எழுதி வைப்பேன். அந்த வகையில் பாரதிதாசனின் இந்த வரிகள் மிகவும் கவரப்பட்டு எழுதி வைத்தேன் என் 11ம் வகுப்பில்.

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்”

ஓரு தடவை என் த‌மிழ் ஆசிரிய‌ர் அதை பார்த்துவிட்டு என்னை கேலி செய்த‌து இன்னும் என் நினைவில் உள்ள‌து. என‌க்கு பிடித்த‌ வ‌ரிக‌ள் சில‌ அவ‌ரின் பாட்டில் இருந்து…

“சாதலெனில் இருவருமே சாதல் வேண்டும்
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்”

எல்லார்க்கும் எல்லாம் எனும் பொதுவுடைமைக் கொள்கையை அவர் இவ்வாறு பாடி இருப்பார்

“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ”

சினிமாவில் வந்து போனதாலோ என்னவோ இந்த பாடல் எல்லா தலைமுறைக்கும் தெரிந்த‌ ஹிட் பாட‌ல்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!”

############################################################

இப்பொழுதெல்லாம் சுப வீர பாண்டியன் சொன்ன இந்த கவிதை அடிக்கடி என் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது.

எதிர்வினை

சிறு வயதில்
உன்னை
தொட்டிலில்
ஆட்டுவதற்கு
என‌க்கும்

இப்பொழுது
என்னை
முதியோர் இல்ல‌ம் வ‌ந்து
பார்ப்ப‌த‌ற்கு
உன‌க்கும்
நேர‌ம் இல்லாம‌ல்
போய்விட்ட‌து.

விதவை - ஆண்பால்

விதவை - ஆண்பால்

விதவைக்கு
ஆண்பால்
என்ன என்று
என்னிடம் கேட்டு
சிரித்தான்
தமிழ் கடவுள்
ஒருவன்

விதவையெனும்
பெண்பால்
இருப்பதே
தவறு என்று
சொல்லி வந்தேன்
அவனிடம் நான்.

குறிப்பு:

உலகிலேயே இந்தியாவில் தான் விதவைகள் அதிகம் என்று படித்தேன் ஓர் கட்டுரையில். 33 மில்லிய‌ன் வித‌வைக‌ள் இந்தியாவில் வாழ்கின்ற‌ன‌ர். மொத்த‌ பெண்க‌ளில் 8% பேர் விதவைக‌ள். ஆண்க‌ளில் 2.5% பேர். நான்கில் ஒர் வீடுகளில் விதவை வாழ்கிறாள். அதைப்ப‌ற்றி யோசித்தப்பொழுது வ‌ந்த‌ க‌விதை இது.

மனைவி அமைவதெல்லாம்….

ஏப்ரல் 22 2007:

onsite-ல் இருந்து திரும்பிய நேரம். எனக்கு மும்முரமாக பெண் பார்த்து கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே இரண்டு பெண்கள் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் பிடிக்கவில்லை. இன்று இன்னொன்று பார்க்க செல்ல வேண்டும் என வீட்டில் வற்புறுத்தி கொண்டு இருந்தார்கள். நான் சற்றே மனவுளச்சளோடு இருந்தேன். பெண் பார்க்க செல்வது என்பது மிகவும் சங்கடமான விஷயம். பெண் பிடித்தால் போயிற்று. இல்லை என்றால் அதில் எல்லோர்க்கும் வருத்தம் மிக அதிகம் வரும். அது ஒரு பாவம் செய்வது போல் எனக்கு தோன்றும். ஆனாலும் பெண்ணை பார்க்காமல் கல்யாணம் செய்து கொள்ள என்னால் முடியவில்லை. அதனால் சம்மதித்தேன். இம்முறை என்னோடு என தமக்கை தன் குடும்பம் சகிதம் வந்தாள்.

கோடை காலம் அது. நல்ல வெயில் வீட்டை விட்டு கிளம்பும்போது. சரியாக 3:30௦ க்கு எல்லாம் அவள் வீட்டின் தெருவை அடைந்தோம். என் வீட்டில் இருந்து அவள் வீடு 3 km இருக்கும். அவள் வீட்டை அடைந்ததும் மேகம் கருந்திருந்தது. அவள் தகப்பனார் எங்களை வரவேற்றார். அவளும் வந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். என் அக்கா அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவள் தகப்பனார் என் அத்தானிடம் ஏதோ பேசி கொண்டு இருந்தார். நான் பொறுமையாக அவளை ரசித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் வெளியே கவனித்தேன் நன்றாக மழை பொழிந்து கொண்டு இருந்தது.

சற்றே நிறுந்தியவள், என்னிடம் பேச ஆரம்பித்தாள். என்னிடம் பேசிய முதல் பெண் இந்த பெண் பார்க்கும் படலத்தில். எனக்கு சற்று வியர்த்திருந்தது. மிகவும் சகஜமாக பேசினாள். இவள் தான் என்னவள் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். இப்பொழுது வெளியில் மழை மிக கடுமையாக பெய்து கொண்டு இருந்தது.

நன்றி வருண பகவானுக்கு. அது எங்களை அதிகம் நேரம் அவள் வீட்டில் தங்க வைத்தது. அதிக நேரம் பேசினோம். மழை விடுவதாய் இல்லை. அவள் சொன்ன எதுவும் என் நினைவில் இல்லை. நான் அவளையே கவனித்து கொண்டு இருந்தேன். இடை இடையே மற்றவர்கள் பேசினார்கள். அவள் வீட்டை சுற்றி வந்தேன். இப்பொழுது மழை குறைந்து இருந்தது.

மழை (பாண்டிச்சேரி) அன்னையின் ஆசி என்று பின்னாளில் அவள் சொன்னாள். ஆனால் மழையின் அர்த்தம் வேறு என்று எனக்கு புரிய சில நாட்கள் ஆயிற்று.


Tuesday, April 6, 2010

நிறத்தை வைத்து.. ஓர் க‌தை

எனக்கு இந்த நிறத்தை பற்றி நினைக்கும் போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த கதை எங்கோ கேட்டது. கற்பனை கதை மட்டுமே. யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.

கடவுள் இந்த உலகத்தை படைத்து கொண்டு இருக்கிறார். இப்பொழுது இந்தியாவில் மனிதர்களை படைக்க வேண்டிய வேலை அவருக்கு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மனிதர்களை படைக்கிறார்.

முதலில் நிறம் கொடுக்க வேண்டும் அவர். காஷ்மீரிலிருந்து நிறந்தை apply செய்கிறார். தெற்கே வரும் பொழது நிறத்தின் இருப்பு குறைகிற்து. எனவே குறைவாக apply செய்கிறார். அடடா.. தெற்கே உள்ளவர்களை கருப்பாக படைத்துவிட்டோமே என வருந்துகிறார்.

அதற்கு பிரதி பலனாக எதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். சரி. இப்பொழுது மூளை படைக்கும் வேலை அவர்க்கு. இந்தமுறை கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பிக்கிறார். வடக்கே செல்ல செல்ல அவரிடம் இருப்பு குறைகிறது…

நீதி: எது முக்கியம் என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும்….

கடவுளும் மரணமும்…

கடவுள் ஓர்
கடவுச்சொல்
எப்படி அழைத்தாலும்
ஓர் புதிர் மட்டுமே
வெளிப்படுகிறது…

மரணம்
மரித்தவனுக்கு மட்டுமே
புரிந்த முடிச்சு..

ஓர் மரணம்
ஆத்திகவாதியை
நாத்திகமாக்கியது.

மற்றொரு மரணம்
நாத்திகவாதியை
ஆத்திகமாக்கியது.

கடவுளும் மரணமும்
பரடாக்ஸ் போல‌
விளக்கவும்
விலக்கவும்
முடியாத‌
ஒன்று…

அஞ்சலி

நான் படுக்கையில்
படித்திட்ட புத்தகம் நீ.
நான் படிக்கையில்
தொலைந்திட்ட புத்தகம் நீ.

கடவுள் இல்லையென்றேன்
அன்று.
நான் கைத்தொழும்
தேவியானாய் இன்று.

உன்னை குட்டிம்மா
என்றுதானே அழைத்தேன்.
நம் குழந்தைக்கு
அம்மாவாய் இல்லாத‌தேன்?

இன்றோடு அரை வருடம்
கழிந்தது கணக்கு.
அரை நூற்றாண்டு
போலிருக்கு எனக்கு,
நீ இல்லாத நாட்கள்.

Sunday, March 21, 2010

தாயுமானவன்

என்னை அதி காலை
எழுப்புகிறான்…

அவன் உண்கையில்
எனக்கு ஒரு வாய் தந்து
அமுதம் படைக்கிறான் ..

இது வேண்டாம்
அது உடுத்து என்று
ஆசை சொல்லி சிரிக்கிறான்…

அலுவலகம் செல்கையில்
அழகாய் கைஅசைத்து
பார்த்து போ என
கிளி பேச்சு பேசுகிறான்

அவன் வளர்கிறான்
நான் குழந்தைஆகிறேன்
தாயான
என் மகனிடம்