onsite-ல் இருந்து திரும்பிய நேரம். எனக்கு மும்முரமாக பெண் பார்த்து கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே இரண்டு பெண்கள் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் பிடிக்கவில்லை. இன்று இன்னொன்று பார்க்க செல்ல வேண்டும் என வீட்டில் வற்புறுத்தி கொண்டு இருந்தார்கள். நான் சற்றே மனவுளச்சளோடு இருந்தேன். பெண் பார்க்க செல்வது என்பது மிகவும் சங்கடமான விஷயம். பெண் பிடித்தால் போயிற்று. இல்லை என்றால் அதில் எல்லோர்க்கும் வருத்தம் மிக அதிகம் வரும். அது ஒரு பாவம் செய்வது போல் எனக்கு தோன்றும். ஆனாலும் பெண்ணை பார்க்காமல் கல்யாணம் செய்து கொள்ள என்னால் முடியவில்லை. அதனால் சம்மதித்தேன். இம்முறை என்னோடு என தமக்கை தன் குடும்பம் சகிதம் வந்தாள்.

கோடை காலம் அது. நல்ல வெயில் வீட்டை விட்டு கிளம்பும்போது. சரியாக 3:30௦ க்கு எல்லாம் அவள் வீட்டின் தெருவை அடைந்தோம். என் வீட்டில் இருந்து அவள் வீடு 3 km இருக்கும். அவள் வீட்டை அடைந்ததும் மேகம் கருந்திருந்தது. அவள் தகப்பனார் எங்களை வரவேற்றார். அவளும் வந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். என் அக்கா அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவள் தகப்பனார் என் அத்தானிடம் ஏதோ பேசி கொண்டு இருந்தார். நான் பொறுமையாக அவளை ரசித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் வெளியே கவனித்தேன் நன்றாக மழை பொழிந்து கொண்டு இருந்தது.

சற்றே நிறுந்தியவள், என்னிடம் பேச ஆரம்பித்தாள். என்னிடம் பேசிய முதல் பெண் இந்த பெண் பார்க்கும் படலத்தில். எனக்கு சற்று வியர்த்திருந்தது. மிகவும் சகஜமாக பேசினாள். இவள் தான் என்னவள் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். இப்பொழுது வெளியில் மழை மிக கடுமையாக பெய்து கொண்டு இருந்தது.

நன்றி வருண பகவானுக்கு. அது எங்களை அதிகம் நேரம் அவள் வீட்டில் தங்க வைத்தது. அதிக நேரம் பேசினோம். மழை விடுவதாய் இல்லை. அவள் சொன்ன எதுவும் என் நினைவில் இல்லை. நான் அவளையே கவனித்து கொண்டு இருந்தேன். இடை இடையே மற்றவர்கள் பேசினார்கள். அவள் வீட்டை சுற்றி வந்தேன். இப்பொழுது மழை குறைந்து இருந்தது.

மழை (பாண்டிச்சேரி) அன்னையின் ஆசி என்று பின்னாளில் அவள் சொன்னாள். ஆனால் மழையின் அர்த்தம் வேறு என்று எனக்கு புரிய சில நாட்கள் ஆயிற்று.